விண்வெளியில் ஒரு குரல்

அந்தப் பறக்கும் தட்டை நோக்கித் தொடர்பலைகளை செலுத்தினான். பலன் இருந்தது. சிக்னல்கள் எதிரொலித்தன. மின்னணுப் பேச்சை ஆங்கிலத்தில் அனுப்பினான் கர்மா.
” ஹலோ, இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலத்திலிருந்து நாங்கள் ஆத்மா, கர்மா. தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.”
கர்மாவையும், ஆத்மாவையும் குபீரெனத் திகைக்க வைத்தது பறக்கும் தட்டிலிருந்து வந்த குரல். ” ஆங்கிலம் வேண்டாம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி இதில் ஏதாவது பாஷையில் பேசினால் நல்லது. “
” நீங்கள் எந்த கிரகத்தை சேர்ந்தவர் ? ” - ஆத்மா பரபரப்புடன் கேட்டான்.
” பூமி. “
” பூமியா? அமெரிக்காவா ? ரஷ்யாவா ? ஜெர்மனியா ? “
” இந்தியா. “திகைப்பு வெள்ளம் அவர்களைத் திணறடித்தது. ” இந்தியாவா? எப்போது யார் உங்களை விண்வெளிக்கு அனுப்பினார்கள்? எங்கே செல்கிறீர்கள் ? உங்கள் இலக்கு என்ன ? “
” ஆகஸ்ட் 47-ல் அனுப்பப்பட்டேன். ஆரம்ப வேகம் குறைவுதான். மெல்ல மெல்ல மேலே செலுத்தப்பட்டவன் இப்போது அசுர வேகத்தை எட்டியுள்ளேன். இலக்கு எனக்குத் தெரியவில்லை. கன்ட்ரோல் தரையில்தான். இன்னும் எவ்வளவு தூரம் என்னை மேலே அனுப்புவார்கள் என்பது எனக்கே தெரியாது. “
ஆத்மா அவசரமாய்க் கேட்டான். ” தங்கள் பெயர் ? “
” விலைவாசி. “
- சத்யராஜ்குமார்

(சாவி 27.7.94 இதழிலிருந்து) http://sathyarajkumar.com/voice

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது