கற்றதும் விற்றதும்

பட்டம் பெற்றோம்
படிப்பு தொலைத்தோம்
சட்டம் கற்றோம்
ஒழுங்கு தொலைத்தோம்
சரித்திரம் பயின்றோம்
சத்தியம் தொலைத்தோம்
வசதிகள் பெற்றோம்
வாழ்வு தொல்த்தோம்.

கல்வியைக் கற்றோம்
கண்ணியம் விற்றோம்
கற்பனை பெற்றோம்
கவிதையை விற்றோம்
இன்பம் பெற்றோம்
இதயம் விற்றோம்
இலக்கியம் கற்றோம்
மொழியினை விற்றோம்.

காசுகள் பெற்றோம்
கடமையை விற்றோம்
காதலைப் பெற்றோம்
கற்பினை விற்றோம்
காணிக்கை பெற்றோம்
கடவுளை விற்றோம்
கண்களைப் பெற்றோம்
ஒளியினை விற்றோம்.

உறவுகள் இருந்தும்
அந்நியர் ஆனோம்
உரிமைகள் இருந்தும்
ஊமைகள் ஆனோம்
ஆளுமை வந்தும்
ஊழியர் ஆனோம்
ஆடை அணிந்தும்
நிர்வானம் ஆனோம்.

வெளிச்சம் வந்தும்
இருள் விலகவில்லை
அறிவு வந்தும்
அறியாமை விலகவில்லை
சூரியன் வந்தும்
சோம்பல் தீரவில்லை
சதந்திரம் வந்தும்
அடிமைகள் மாறவில்லை.

நன்றி; கவியரசு இ.முத்துராமலிங்கம்
(சுட்ட பழம் - பூம்புகார் பதிப்பகம் )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது