இன்றே கடைசி

சிவபெருமானின் தலையில் வாழ்வதாய்
நம்புகிறாளே ஒழிய அடிவாரத்தில் இறங்கி
ஆண்டவனை இதுவரை தரிசித்ததில்லை.

குழந்தைகளுக்கு கதை சொல்லும்
அம்மாக்களின் வார்த்தைகள்
பொய்யாகி விடக்கூடாதே என்றுதான்
தினந்தோறும் வருவதாக
தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

இந்த இடத்தில் பார்க்கும போதே திருடும்
காக்கைகள் தொந்திரவில்லை.
பாட்டுப் பாடச் சொல்லும்
நரிகளும் வருவதில்லை.

முன்புக்கு இப்போது பரவாயில்லை.
பள்ளங்களுடன் வாழ்வது
பழக்கமாகி விட்டது.

தனிமையை விரட்ட கற்களுடன் பேச
கற்றுக்கொண்டு விட்டாள்.

தவ்வித் தவ்வி குதித்து வாழ்ந்த கதை சொல்ல
பிரபஞ்ச மெளனத்துடன்
புன்னகைக்கின்றன பாறைகள்.

எப்போதோ வந்த ஆரம்ஸ்ட்ராங்கிற்குப் பிறகு
யாருமே வாங்க வராததால்
அன்றைக்குச் சுட்ட வடைகளை அருகிலிருக்கும்
பள்ளத்தில் வீசி விட்டு எழுந்து போகிறாள்
நிலவில் வடை சுடும்
நெடுநாளையக் கிழவி.

கவிதை- நா.முத்துக்குமார் (குமுதம்1-11-2004)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது