இந்த நாள் இனிய நாள் அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள் இல்லாதவராகக் காரியங்கள் செய்வார். அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்? இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை. மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்... அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று சிந்தித்தார் அரசர்."பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?' என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.
ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே கிடையாதா? ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று கேட்டார் அரசர்."மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை... வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி... இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்; விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.
இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும் கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம் உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார். "வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்."அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார் மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும். அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார் அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன். "ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான். எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறினான். எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற் பட்டு விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. அதிகம் உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்... ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது! அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்... "அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.
அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது. இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.
நன்றி; சுகிசிவம் (இந்த நாள் இனிய நாள் )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment