மேசை துடைக்கும் குழந்தை !

ரசப்பூச்சு வெளிறிய கண்ணாடி
அழுந்தக் கழுவப்படும் முகம்
ஒரு கணம் இறந்த புத்தனின் வதனம்

அள்ளி ஊற்றினால்
அடிப்புறத்தைச் சுரண்ட வேண்டிய அளவு தண்ணீர்
முதுகுக்குக் கரமெட்டாமல் ஒரு குளியல்
ஆடிய நீர் விளையாட்டுகளில்
ஏரிகளின் அடிமடி அதிர்ந்ததொரு காலம்

உடலை இறுக்கிப் பிடிக்கும்
அழுக்குச் சட்டையை
அவசரமாய் மாட்டிக்கொண்டு
கடைக்கு ஓடினால்
கொடுஞ்சொல் வசவுகளுடன்
வரவேற்கும் முதலாளி

தலை குனிந்த படி
வாளியைக் கைக் கொண்டு
நம் மேசையருகே வருகிறான்

அவனை மடியமர்த்தி
நாம் உண்ணும் அமுதை
அவனுக்கு ஊட்டி
செல்லம் கொஞ்சி
அழகு பார்க்க வேண்டிய நாம்
அதட்டுகிறோம் . . .
''டேய் !
மேசையை சுத்தமாத் துடைடா !''

நன்றி ; மகுடேசுவரன் (ஆனந்த விகடன்-6-2-08)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது