கொக்கென்று !

சின்னஞ்சிறுகதை...கொக்கென்று...

கே.என்.ராமசந்திரன்

கொங்கணவன் நகராட்சித் தலைவராகப் பதவியேற்றபின் காலையில் ஏரிக்கரையில் நடந்துவந்தான். அங்கு புதிதாக குடிசை எழும்பியிருந்ததைக் கண்டதும் அவன் கண்கள் சிவந்தன. ஏரிக்கரையில் சட்ட விரோத ஆக்கிரமிப்பா? " யாரடா ஏரியிலே குடிசை போட்டது?" என்று கர்ஜித்தான். குடிசைக்குள்ளிருந்து ஒருவன் வெளிப்பட்டு "தலைவரே, நான் தான் கொக்கு! குடியிருக்க வேற இடம் கிடைக்கல்லே, தயவு பண்ணுங்க!" என்று காலில் விழுந்தான். கொங்கணவன் கண்டிப்புடன் தன்னுடன் வந்த பியூனைப் பார்த்து "உடனடியாக குடிசையைப் பிய்த்தெறி!" என்று உத்தரவிட்டு மேலே நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும் ஒருநாலு மாடிக்கட்டிடம் தென் பட்டது. அவன் கோபம் மேலும் அதிகமாகியது. அந்த பங்களா வாசலில் போய் நின்று அழைப்பு மணியை அழுத்தினான், அழுத்திக் கொண்டேயிருந்தான். அரைமணி கழித்து ஓர் அம்மாள் ஆடி அசைந்தவாறு வந்து "வாங்க, என் பெயர் வாசுகி" என்று கைகூப்பினாள். கொங்கணவன் "நீங்க ஏரிக்குள்ளே ஆக்கிரமிப்புப் பண்ணி வீடு கட்டியிருக்கீங்க! உங்க மேலே நடவடிக்கை எடுக்கப்போறேன்!" என்றான். வாசுகிவிஷமப் புன்னகையுடன் "என்னையும் கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா?" என்று கேட்டாள்.
கொங்கணவன் "அது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று திகைப்புடன் கேட்டான். "எனக்கு எவ்வளவோ தெரியும். நீ தொழிலுக்குப் புதுசு! கடைத்தெருவில் கசாப்புக் கடை தர்மவியாதனிடம் போய் உபதேசம் பெறுவாயாக" என்று வாசுகி சொன்னாள். தர்மவியாதன் கொங்கண வனைக்கண்டதும் "சார், வாசுகியம்மா அனுப்பிச் சாங்களா?" என்று கேட்டான். கொங்கணவன் ஆச்சரியத்துடன் "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான்.
"செல்போன் என்று ஒரு சமாசாரம் இருப்பது கூடத் தெரியாத அப்பாவியா யிருக்கியே! அதான் சேர்மனாகி ஒரு மாசமாகியும் சின்னக் கார் கூட வாங்காமலிருக்கே. நான் சொல்றதைக் கேட்டு நடந்தியானா பெரிய காராவே சீக்கிரத்திலே வாங்கிடலாம்" கொங்கணவன் ஆவலுடன் "எப்படிங்க?" என்று கேட்டான். "குப்புசாமின்னு ஒரு சேர்மன் தெரியுமா? மக்களுக்குக் குடிநீர் வழங்கறதுக்காக 15 லட்ச ரூபாய் செலவிலே 15 கிணறு வெட்டினதாகக் கணக்குக் காட்டினாரு" "15 கிணறா? அதெல்லாம் எங்கே?"

"கணக்குக் காட்டின தாத்தானே சொன்னேன். அடுத்த வருஷமே அதிலே நல்ல தண்ணியில்லே. மக்களுக்கு இடைஞ்சலாயிருக்குன்னு 15 லட்ச ரூபாய் செலவு பண்ணி அதையெல்லாம் மண்ணைக் கொட்டி மூடிட்டதாகக் கணக்குக் காட்டிவிட்டார். இதுபோல ஒரே சாலையை 9 வாட்டி போட்டதாக் கணக்குக் காட்டினாரு. ஆறே இல்லாத இடத்தில் பாலம் கட்டினார். முனிசிபல் ஸ்கூலில் தினமும் இருநூறு பேருக்குச் சத்துணவு போட்டதாக் கணக்கு எழுதுவாரு. இப்படியே அஞ்சு வருஷத்தில் ஐநூறு கோடி சம்பாரிச்சுட்டு இப்ப நிம்மதியா ரெண்டு பொண்டாட்டிங்களோடு சந்தோஷமாயிருக்கார்!" "இதெல்லாம் தப்புங்க!" "இதப்பாரு. நீயும் 5 வருஷம் தான் பதவியிலே இருக்க முடியும். அடுத்த எலக்ஷனில் நீ ஜெயிக்க மாட்டாய். வாய்ப்பு இருக்கறபோது சம்பாதிச்சுடு. அதுதான் உனக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது" என்றான் தர்மவியாதன். "இல்லீங்க, என்னாலே சட்டத்துக்கு விரோதமா நடக்க முடியாதுங்க!" என்றான் கொங்கணவன்.

. "அப்படியா! உன்னை மாதிரி ஆளால தொந்தரவாச்சே! சரி கொஞ்சம் தலையைக் குனி" என்று சொன்ன தர்மவியாதன் கறி வெட்டும் கத்தியைக் கையிலெடுத்தான்!

நன்றி; அமுதசுரபி (பிப்ரவரி 2008 )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது