ஒரு பொஎனக்குத் தராமல்ழுதும்
ஒளித்து எடுத்து வரும்
எள்ளுருண்டையையோ
உமிழ்நீர் சுரக்க வைக்கும்
உளுந்தங் களியையோ
தனித்து உண்டதில்லை நீ
எனக்காக வெல்லக்கட்டிகள்
முடித்தே இருக்கின்ற
உன் சட்டைகள் இரண்டிலும்
நிரந்தரப் பழுப்புக்
கறை படிந்திருக்கும்
நம் பள்ளி நடு மதியத்து
இடைவெளிகளில்
நாகம்மா தோட்டத்து
நவ்வாப் பழங்களை
மண் ஊதித் தர நீ
மரநிழலில் காலாட்டிச்
சுவைத்திட நான்
உன்னிடத்தில் நான்
ஊடல் கொள்கையில்
ஊருணிக்கரையில் வழித்தெடுத்த
கரம்பையில்
உன் கண்ணீரும்
குழைத்தெடுத்து நீ
கொடுத்த மண் பொம்மைகள்
என் இளம் பருவத்துப்
பிரமிப்புப் பிரமிடுகள்
பொறிகடலை மாவில்
சர்க்கரை பிசைந்து
மை கலைந்த
தினத்தாள்களில் பொசிந்து
எனக்காய் எடுத்து வரும் உனக்கு
சர்க்கஸ் வித்தையின்
சாகசத்துடன் நான் செய்கின்ற
சாக்லேட் சுற்றின சரிகைக்
காகித உருவங்களே
சாகாவரம் பெற்ற
கனவு தேவதைகள்
புளியம்பட்டி வாத்தியாரின்
வழுக்கைத் தலை வரைந்து
நாம் பிடிபட்ட அன்று
எனக்காகச் சீட்டிப் பாவாடையில்
சுருட்டி வைத்திருந்த
சீத்தாப் பழ கருமுத்துக்கள் சிதறக்
காட்டிக் கொடுக்காமல்
பெஞ்சின் மேல் நீ
ஊமத்தஞ் சாறெடுத்து
ஒவ்வொரு திங்களும்
ஊற வைத்துக்
கரும்பலகை வகுப்பு கழுவ
என் முறை வரும் பொழுதோ
எப்பொழுதும் நீ துடைக்க
சுத்தக் கைகளுடன் சுகமாய் நான்
தொலைந்து விடுமென்கிற பயத்தில்
பயன்படுத்தாமலே நீ வைத்திருந்த
உனக்கான என் பரிசான அந்த
ஊதா நிறப் பேனாவின்
நிப்பு உடைந்த அன்று
ஊர்ப்பட்ட அழுகையுடன்
இருக்கன்குடி அம்மனிடம்
இவ்வருடம் போகாத
சாமி குறையேயெனப்
புலம்பித் தீர்த்தாய்.
வாத்தியார் வீட்டுப் பிள்ளை நான்
வயல்காட்டுத் தும்பைப்பூ நீ எனும்
வகுப்புப் பேதங்கள்
கல்லெறியா என்
மனக்குளத்தின்
கலையாப் பிம்பம் நீ
நான் மாடியிலும்
நீ ஊர்க்கோடியிலும்
வசித்தாலும் வர்க்கச் சாலைகள்
பிரவேசித்திராத
என் குழந்தைமை நிலவின்
முதல் தோழமைச் சுவடு நீ
இருவரையும் ஒரே கரிசல் மண்ணில்
கவனமுடன் பதியம் போட்டாலும்
பின் வந்த காலத் தோட்டக்காரனோ
பட்டணத்தில் படிப்பிப்பவளாய்
என்னையும்
பக்கத்தூர் மேஸ்திரி
மனைவியாய் உன்னையும்
பாகுபடுத்திப் படரவிட
ஏணிப் படிகளில்
விரைவாய் நானும்
சுரங்கத்து இருட்டில்
முழுதுமாய் நீயும்
காணாமல் போனோம்
என்றாலும்...
மாசித் தேருக்குத் தவறாமல்
இடித்த மாவிளக்கு மாவோடு
எனைப் பார்க்க
நசுங்கிய குடமாய்
வருடந்தோறும் உருமாறி வந்த
எஞ்சோட்டுப் பெண்ணே
சிலம்பாயி
இந்த முறை தேருக்கு
இரண்டாவது இரட்டைச் சடை
மொட்டு வர
ஒரு வேளை உனக்குச்
`சுகவீனமோ' என நான் வினவ
பின்னிருந்து
நாலாவது பிரசவத்தில்
நீ இறந்துவிட்டதாய்
மூன்றாவதைச் சுமந்திருந்த
உன் முதலாவது சொன்னபொழுது,
என் மனத்தேரின்
கடையாணி கழன்று
மகளின் மாவிளக்கில்
புதைந்து போனது.
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது;
கவிதை; தமிழச்சி
courtesy:
http://kumudam.com/magazine/Snegiti/2008-06-01/pg15.php#
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment