சமீப காலமாய்
எங்களுக்குள் இல்லை
ஒரு நெருக்கமும்
நானே முயன்றும்கூட
நெருங்க முடிவதில்லை
அவனை...
இழுத்தணைத்து
முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து
நதியோரக் கோரையாய்க்
குத்திட்டு நிற்கும் முடி நீவ
நீளும் என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி...
தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும்
போராட்டத்தினூடே
கரைகிறது பழைய நெருக்கம்
நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்துபோகுமா என
ஒருமுறை கேட்டவனுக்கு
என்னிடம் அறிந்துகொள்ள
இன்றொரு பதிலுமில்லை
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும்
உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன்.
`பச்சை தேவதை' தொகுப்பிலிருந்து... காலடிச்சுவடுபதிப்பகம்
courtesy:kumudam.com/magazine/snegiti
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment