ஐயனார்;
முறுக்கு மீசை,அறுவாளோடு
மிரட்டும் தோரணையில்
அமர்ந்திருக்கும்
ஐயனார் மட்டும்
உள்ளுக்குள் உடைந்தழுவார்
குழந்தைகள் தனைக்கண்டு
பயமுறும்போது!
(பெ.பாண்டியன்)
----------------------------------
கடிதம்;
கடிதம் எழுதுவதே
மறந்து விட்ட
இந்தக் காலத்திலும்
வந்துகொண்டுதானிருக்கிறது
வாங்கிய கடனை
திருப்பிக் கட்டச்சொல்லி
வங்கியிடமிருந்து!
(எஸ்.சங்கர்)
----------------------------------
சில்லறைச் சத்தம்;
பசிக்காக
பார்வையற்ற ஒருவன்
பாடும் பாடலின்
சுருதி,லயம் இரண்டையுமே
அவ்வப்போது
சரிசெய்து கொண்டிருக்கிறது
இடையிடையே தட்டில் விழும்
சில்லறைச் சத்தங்கள்.
(மோகன்)
----------------------------------
டி.வி.பாட்டி;
தொலைக் காட்சியே
கதியெனக் கிடக்கிறாள்
கதை சொன்ன
பாட்டி!
(கிருஷ்ண கிறிஸ்து முகமது)
-----------------------------------
நிழல்;
நல்லதொரு
கவிதை எழுதலாம்
என்று
வெற்றுக் காகிதத்தை
மேசைமீது வைத்தேன்
எழுதுகோலையும்
நிமிர்த்திவிட்டேன்
பூர்த்தி செய்து விட்டது
உன் நிழல்!
(சா.பாலமுருகன்)
----------------------------------
மழை;
எல்லாத் தவளைகளும்
தவறாமல் பாடுகின்றன
மழையைப் பாராட்டி
தத்தமது பாடல்களை!
(திருமயம் பெ.பாண்டியன்)
நன்றி; வாசகர் கவிதை(குமுதம் 18-6-06)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment