நாமே நீதிபதிகளாவதா?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நம்மிடம் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறோம்.
நீதிபதி என்பவர் குறைகளற்றவராக இருக்க வேண்டும் என்பது இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பு.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானமாகத் தீர்ப்பு வழங்கிவிட முடியாது. நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் தீர்ப்புகள் மாறுகின்றனவே, இதுவே இதற்கு அத்தாட்சி.
பல நேரங்களில் நமக்கு மேலே தீர்ப்பு வழங்க இன்னும் யார் யார் இருக்கிறார்கள்? நமக்கு இணையான சமஉரிமை உள்ளவர்கள் யார் என்று சிந்தனை செய்து பார்க்காமல் செயல்படுவதாலேயே பல கோளாறுகள் ஏற்படுகின்றன. நம் தீர்ப்பு மீறப்பட்டு மரியாதை கெட்டுப் போகிறது. இவர் யார் தீர்ப்பு வழங்க என்கிற எதிர்க் கேள்வியும் விஸ்வரூபம் எடுக்கிறது.
பலர், கண்டிக்க மட்டுமே உள்ள தங்களது அதிகார எல்லையை தண்டிக்கும் எல்லையாகச் சுயமாக உயர்த்திக்கொண்டு அவதிப்படுகிறார்கள்.
இதைவிட மோசமான பிரிவினர் உண்டு. இவர்களுக்கு யோசனை கூறும் உரிமை மட்டுமே இருக்கும். ஆனால் ஆத்திரத்தில் மதி கெட்டு தீர்ப்பே வழங்கிவிடுகிறார்கள்.
காவல் துறையில் பிடித்துக் கொடுக்கப்படவேண்டிய திருடனை அடித்தே கொன்ற செயலுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் இத்தகைய இரகத்தினர் எனலாம். அவசரப்பட்டு இவர்கள் வழங்கிய தீர்ப்புகளைப் பிறர் சவால்விட்டுக் கேட்கும்போது, அதைப் பெரிய கெளரவப் பிரச்னையாக்கி மனஅமைதியை இழக்கிறவர்களும் உண்டு. குடும்பப் பிரச்னையில் குடும்பத் தலைவனுக்குத் தீர்ப்பு வழங்க உரிமை உண்டு என்று எண்ணுபவர்கள் உண்டு. தவறு. குடும்ப உறுப்பினர்களையே சக நீதிபதிகளாகச் சேர்த்துக் கொண்டு தீர்ப்பு வழங்கினால் அதுவே பாதுகாப்பு.
இதைவிட தண்டிக்கப்பட வேண்டியவரையே அழைத்து, ‘தவறு என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனக்கு என்ன தண்டனை தரலாம் சொல்’ என்று கேட்டுவிடுவது? இன்னுங்கூடப் பாதுகாப்பானாது! இதைவிடச் சிறப்பானது காலமோ பிறரோ தண்டிக்கட்டும் என விட்டுவிடுவது!
**********************************************
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
நன்றி;http://www.tamilvanan.com/content/2008/09/19/20080919-lena-katturai/
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment