வியர்வை படிந்த பாதை
**************************************
கூலிப்பெண்கள்
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
தளர்வாய்
அடிவயிற்றிலெரியும் பசி
பார்வையின் தொலைவை
பாதியாய் குறைத்திருக்க
ஏறக்குறைய எல்லோரையும்
ஓரே அச்சில்
ஊற்றி வார்த்திருக்கிறது வறுமை
உரையாடலின் வழியே
சற்றே களைப்பு மறக்கிறார்கள்
அரிசி பருப்பு
புருஷன் பிள்ளைகள்
கவலைகளின் கனம்
இடையிடையே மெளனந்தர
கிடைக்கின்ற கூலியில்
அவர்கள் வாழ்வதில்லை..
பிழைக்கிறார்கள்...
அவர்களுக்காய்
அழுது சிவந்திருக்கின்றன
அந்த அந்தியும்
இந்தக் கவிதையும்
************************************
எழுதியது தூரன் குணா
(நன்றி--தாமரை ஜூன் 2002)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment