பிரகலாதன் கவிதைகள்

எங்கே அந்த நிழல்

மழை நின்று
ஈரப் பிசுபிசுப்பான
காற்று வெளி
ஞாயிற்றின் தூரிகைகள்
தீட்டிய சித்திரம்
வானவில்

நிறங்களைக்கணக்கிட்டேன்
கருமையைக் காணவில்லை
அங்கே ?

கரிய விழிகளை அகல விரித்து
உயரே பார்த்து வியந்தாள்
அவள்

நானும் வியந்தேன்
வானவில்லில் இருந்து
களவாடப்பட்ட அந்த நிலா
அவளது விற்புருவங்களாய்
வீற்றிருப்பது கண்டு !
*************************************

நினைவுகள்
உன்னை மறந்து விடவேண்டும்
மறந்து விட வேண்டும்
என்று
நினைத்துக் கொண்டிருப்பதிலேயே
மறுபடியும்
மறுபடியும்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது
உன் நினைவுகள் !

நீயும் நானும்

உன் பார்வைகள்
வெளிப்பரப்பின் காற்று !
நான் வெட்ட வெளி
கற்பூரத் திட்டு !

கூடு

அறிவியலின்
அன்றைய பாடம்
மனித எலும்புகள்

கம்பிகளால் கோத்து
கண்ணாடிப் பெட்டிக்குள்
எலும்புக் கூடு

கைகாலெலும்பு
இது முதுகெலும்பென்று
வேறு பிரித்து விளக்கும் ஆசிரியர்

வேறு பாடம் போவோம் ஐயா
தொழிற்சாலைக்குப் போய் திரும்பும்
அன்னை தந்தையரை
நாளும் பார்த்திருக்கும்போது
மேலும் எதற்கு
விளக்கமென்று
விடை பகர்ந்தனர்
சிறார்கள் !
**************************************************
பிரகலாதன்
நதிக்கரை நாணல்கள்- கவிதைத் தொகுதி

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது