வாரண மாயிரம் கேட்டதில்லை - புது
வண்ணப்பட் டாடைகள் தேவையில்லை
தாரக மந்திரம் கேட்டது போல் - தம்பி
தலையசைப்பது போதுமடா!
ஊரறியப் புகழ் தேவையில்லை - குயில்
ஒண்டுக் குடித்தனம் செய்வதில்லை
வேரைப் பிடித்தது போலத் தம்பி - குரல்
விக்கித் திணறுதல் போதுமடா!
நாற்சந்தியில் சிலை நட்டுவைத்துப் பல
நாட்களுக்கோர்முறை மாலையிட்டு
ஊர்க்குருவிக்காகம் எச்சமிட்டுக் கடல்
உப்புக் கரிப்பினில் சிக்குவனோ?
மார்பு துடிக்குது வார்த்தையிலே! எந்தன்
மண்டை சுழலுது போதையிலே என்று
வார்த்தை தடுமாறித் தம்பிவிழி - ஏழு
வண்ணம் பளிச்சிடல் போதுமடா!
வானக் கருமுகில் பொழிவதெல்லாம் - ஒரு
வண்ணச் சிறகின் வருடலிலே!
மோனம் கவிதையில் விடிவதெல்லாம் - உன்
மோக மனத்தின் துடிப்பினிலே
(வாரணமாயிரம்...)
*****
கவிஞர் ரமணன் பாரதி யுகத்துக் கவிஞர். தான் இயற்றிய கவிதைகளை மிகுந்த உணர்ச்சியோடு பாடுகிறவர். இவரது கவிதை நூல்களான 'வண்டி போய்க்கொண்டிருக்கிறது', 'ரமணனைக் கேளுங்கள்' ஆகிய இரண்டுமே அச்சு நூலாகவும், குறுந்தகடுகளாகவும் ஒரே சமயத்தில் (2006) வெளியாயின. ஆங்கில நாளிதழ் ஒன்றின் பதிப்பாளராகப் பணிபுரிந்த இவர் விருப்ப ஓய்வு பெற்று விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். கவிதை, இலக்கியம், ஆன்மீகம் என்று இவற்றிலே முழுநேரம் செலவிடுகிறார்.
ரமணன் கவிதைகள் courtesy: http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=92&cid=34
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment