மரப் பொந்தில் எலி ஒன்று வசித்து வந்தது. அந்த எலியானது தினமும் இரவு நேரத்தில் இரைத் தேடச் செல்லும். இரவெல்லாம் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று கிடைக்கும் இரையை உண்டு விட்டு பின்னர் மறுநாள் அதிகாலை நேரத்தில் தன்னுடைய இருப்பிடத்தை வந்தடைந்துவிடும்.
ஒரு நாள் அதிகாலை நேரத்தில் அந்தப் பக்கமாக நரி ஒன்று வந்தது. அது மரப் பொந்தின் உள்ளே செல்கின்ற எலியைப் பார்த்துவிட்டது.
"எலியே! எலியே!'' என்று பொந்தில் வெளியே நின்றபடி அழைத்த
"நரியே! நரியே! என்னை எதற்காக அழைத்தாய்?'' என்று கேட்டது எலி.
"எலியே! உன்னைப் பார்க்கையில் நீ இரவெல்லாம் கிராமத்து பக்கம் சென்று இரைத்தேடி விட்டு அதிகாலை நேரத்தில் உனது இருப்பிடத்திற்கு வருவாய் என்று தோன்றுகிறது. இனிமேல் நீ கிராமத்துப் பக்கம் செல்லும் நேரம் என்னையும் உன்னோடு அழைத்துச் செல். நீ கிராமத்து வீடுகளில் உள்ளே சென்று இரைத் தேடிக் கொள். நான் வெளியே இருக்கின்ற இரையைத் தேடிக் கொள்கிறேன்,'' என்றது நரி.
"நரியே! உனக்கும், எனக்கும் எந்தப் பொறுத்தமும் இல்லை. நானோ சிறு விலங்கு. சந்து, பொந்து எதுவாக இருந்தாலும் அதில் நுழைந்து சென்று விடுவேன். எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஏதாவது சிறிய இடத்தினுள் புகுந்து உயிர் பிழைத்துக் கொள்வேன். ஆனால், நீ அப்படியில்லை. நீ கிராமத்து மனிதர்கள் யார் வசமாவது சிக்கிக் கொண்டால் அவர்கள் உன்னை நையப் புடைத்து விடுவர். அதனால் உனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதனால் நீ என்னோடு வரலாம் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்,'' என்றது எலி.
"எலியே! நீ தயவு செய்து எனது விருப்பத்தை ஏற்றுக் கொள்! எனக்கு கிராமத்தில் சென்று இரைத் தேடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் ஆடுகளையும், கோழிகளையும் அடித்து சாப்பிட வேண்டுமென்று மிகவும் ஆசைப்படுகிறேன். எனவே, என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ எனக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தால் அதனை நான் என்றுமே மறக்கமாட்டேன்,'' என்றது நரி.
"சரி நரியே! நீ என்னோடு வரவேண்டுமென பிடிவாதமாக இருக்கிறாய்! உன்னுடைய பிடிவாதத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே, இன்று இரவு நீ இங்கே வந்துவிடு. நான் முன்னே செல்ல நீ என்னைப் பின் தொடர்ந்து வா!'' என்றது எலி.
"ஆஹா! எலியே! இதைக் கேட்கிற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனவே, நான் இரவு கண்டிப்பாக வந்துவிடுவேன். நீ என்னை மறக்காமல் மறுக்காமல் உன்னோடு அழைத்துச் செல்,'' என்றது நரி. அன்றைய இரவு சரியான நேரத்தில் நரி வந்தது. எலியும் வெளியே புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
"நரியே! நீ தெரிவித்தபடியே சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய். இப்போதே நாம் இருவரும் புறப்படலாம்,'' என்றது எலி.
எலி ஓர் கிராமத்தை வந்தடைந்தது. ""நரியே நான் வீட்டின் உள்ளே புகுந்து எனக்கு கிடைக்கும் இரையை சாப்பிடுகிறேன். நீ வீட்டின் வெளியே என்னென்ன இரை கிடைக்கின்றதோ அதனையெல்லாம் சாப்பிடு,'' என்று கூறியபடி வீட்டின் உள்ளேப் புகுந்து கொண்டது எலி.
நரியோ மகிழ்ச்சியோடு வீட்டுக் காம்பவுண்டின் உள்ளே சென்றது. அங்கே ஒரு கோழிக் கூண்டு காணப்பட்டது. நரி அந்தக் கோழிக் கூண்டின் உள்ளே புகுந்து கோழிகளைப் பிடித்தது. அதனைக் கண்டதும் கோழிகள் எல்லாம் கொக்... கொக்... என்று கூக்குரல் எழுப்பின. அந்த நேரம் வீட்டுக் காவலுக்குப் படுத்திருந்த நாயானது கண் விழித்துக் கொண்டது. உடனே அது சப்தமாக லொள்... லொள்... லொள்... என்று குரைக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எல்லா நாய்களுமே லொள்... லொள்... என்று குரைக்கத் தொடங்கின.
நாய்களின் குரைப்பு சப்தம் கேட்டதும் கிராமத்தினர் அனைவரும் விழித்துக் கொண்டனர். கிராமத்திற்குள் திருடன் யாராவது நுழைந்திருக்க வேண்டும். அதனால்தான் நாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல் குரைக்கின்றன என்று நினைத்தனர். உடனே அவர்கள் கையில் தடியுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.
திபுதிபுவென்று மக்கள் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே வருவதைக் கண்டதும் நரி திடுக்கிட்டது. அதனால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. "இவர்களிடம் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை அடித்தே கொன்று விடுவர்' என்று மனதுள் எண்ணிய நரியானது தாமதிக்காமல் கூட்டத்தின் உள்ளே புகுந்தபடி ஓட்டமெடுத்தது.
கிராம மக்கள் நரியைக் கண்டு திடுக்கிட்டனர். "இந்த நரியைப் பார்த்து தான் நாய்கள் எல்லாம் குரைத்திருக்க வேண்டும். கிராமத்திற்குள் நுழைந்து திருட வந்த இந்த நரியினை நாம் சும்மா விடக்கூடாது' என்று முடிவு செய்தனர்.
மின்னல் வேகத்தில் தங்கள் கைகளில் தடியினை ஏந்தி நரியைத் துரத்தினர். ஓடியபடியே பின்னால் திரும்பிப் பார்த்த நரியோ மேலும் திடுக்கிட்டது.
"தம்' பிடித்துக் கொண்டு இன்னும் வேகமாக ஓட முயற்சித்தது. மின்னல் வேகத்தில் அந்த கிராமத்தை விட்டு ஓடி மறைந்தது நரி.
எலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த இரையை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் தன் பொந்தை வந்தடைந்தது.
அங்கே எலியின் வருகைக்காக நரி காத்துக் கொண்டிருந்தது. ""எலியே! நீ சொன்னது உண்மைதான். நான் ஆபத்தை சந்தித்து விட்டேன். நான் உயிர் பிழைத்ததைப் பெரிதாக நினைக்கிறேன். இனிமேல் ஒருபோதும் இப்படி முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடமாட்டேன்,'' என்றது நரி.
"நரியே! நான் கிராமத்திற்குச் சென்று இரைத்தேடி உண்பதுபோல் நீயும் உண்ண வேண்டுமென்று ஆசைப் பட்டாய்! அதன் விளைவை நீயே உணர்ந்து கொண்டாய்! எப்போதுமே பிறர் வாழ்க்கையைப் பார்த்து ஆசைப்பட்டால் இந்த மாதிரி துன்பங்களைத் தான் நாம் அனுபவிக்க வேண்டும்,'' என்றது எலி.
நரியும் எலியின் கருத்தினை ஏற்றுக் கொண்டது.
நீதி: குட்டீஸ்... அவங்க அவ்ளோ வசதியா இருக்காங்க. இவங்க இவ்ளோ வசதியா இருக்காங்க என்று சொல்லி மற்றவர் வாழ்க்கையை பார்த்து ஆசைப்படாதீர்கள். உங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையுங்கள் !.
http://www.dinamalar.com/siruvarmalar/smrmay_1605/sirukathai.asp
0 comments:
Post a Comment