ஆறு அழகிகள் ! - Kannabiran Ravi Shankar

என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!

1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
“விநயம்” என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
MS AMMA
பணிவே அழகு! – எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! – அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
ARUNDALE
நடனம் அழகு! – ருக்மிணி தேவி அருண்டேல்

3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
NOOYI
மிடுக்கு அழகு! – இந்திரா நூயி

4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு – அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?

காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
Aruna Roy
நற்பணி அழகு! – அருணா ராய்

5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
VELANKANNI
கருணையே அழகு! – அன்னை வேளாங்கண்ணி

6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்…இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்….
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!

இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், – இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை – இவள் புற அழகு தான் என்ன!!

தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!

ANDAL AZHAGU
ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! – ஆண்டாள் அழகு!!

source:

http://madhavipanthal.wordpress.com/2007/04/15/

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது