விண்ணிருந்து மண் வந்த மலரெனவே
மராட்டி மண்ணிருந்து இங்கு வந்த
மங்கையவள் பெயர் பாரிஜாதமாம்
பக்கத்து வீட்டின் புது வரவு
அவர் வீட்டில் பேசினால் என் வீட்டில் கேட்கும்
பல ஊர் சுற்றி வந்த எனக்கோ
பத்து மொழியில் தெரியும் ஐந்து சொற்கள்
அன்றொரு நாள் சிதறிய முத்துக்கள் எனத்
தரையதனில் தான் கிடந்த
பாரிஜாத மலரதனைப் பொறுக்கச்
சென்றேன் தோட்டத்துள் நான்
வேலியின் இரு புறமும் கண்டேன் பாரிஜாதம்
ஒரு புறம் செடி மறுபுறம் கொடி
பெயர் போன்றே வெள்ளை முகம்
சோகை பிடித்த வெள்ளை அல்ல அது
ரோஜா வண்ணம் சிறிதே கலந்த வெள்ளை
சுண்டினால் பால் தெறிக்கும் என்பது போல்
ஒரு கணம் மயங்கி நின்றேன் மங்கையவள் அழகினிலே
இரு ஜோடிக் கரு விழிகள் கூடிடவே மலர்ந்தன
மாதுளம் மொட்டென விருந்த அவள் செவ்விதழ்கள்
மலரவள் முகமதிலோர் புன் சிரிப்பு
மறு கணமோர் சிம்மக் குரல் உள்ளிருந்தே
பாரீ என்ன செய்கிறாய் பார் நீ
பனியினிலே நின்றால் சளி பிடிக்கும் உனக்கு
படுத்திடுவாய் பத்து நாள், வா உள்ளே என்றே
மானெனத் துள்ளியே பாய்ந்தது உள்ளே
பாரிஜாதமெனும் அப் பச்சிளம் குழந்தையுந்தான்
-------------------------------------------------------------
posted by நடராஜன் கல்பட்டு
Thanks: http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0904nkn_flower.php
0 comments:
Post a Comment