வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்:

இருமை:

நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.

ஒரு நாள் வகுப்பறையில்
என் அழகான ஆசிரியை
உலகை உருண்டையாய் வனைந்து
பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.
சூரியனை தேரினால் இறக்கி
பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.
பின்னர் கல்லூரியிலோ
ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்
கோடிகோடி சூரியன் வைத்தார்.

இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில்
வாழ்வு மனசிலாகியது.
கற்ற உலகிலோ எனது அறிவு
கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.
இந்த இருவேறு உலகும்
என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.

நதியின் அக் கரையோ
முன்பொரு காலத்தில்
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற்கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.

காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.

*******************************
வாழ்வின் கவிதை:

நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள்.
புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை.
துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை.
பசுமை இனிக்க மான் கிழை
வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி.
அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது
இக்கணம்.
என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும்
வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு.

டைட்டானிக் கனவு மனிதா
உன் விஞ்ஞான வரைபடத்தில்
ஏது மிதக்கும் பனிப்பாறை.
எனினும் உன்னால் இயலுமே
முழ்கையிலும் வயலின் மீட்டி
சாவையும் வாழ்தல்.
ஞான் அறியும்
நஞ்சு பருக விதித்த பின்னும்
வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் காதை.

இலக்கமில்லா வாகனம் ஊரும்
எதிரிகளின் துப்பாக்கி சுட்டும் போதும்
நண்பரது கொலைக்கரத்தால் விலங்கு பூண்டு
நாள் நேரம் காத்திருந்த வேளையிலும்
வாழும் ஆசை புதுவெள்ளமாய் பெருக
ஜீவநதியாய் இருந்தேன் என்பதன்றி
பெருங்கவிதை
என் வாழ்வில் வேறு ஏது.

கையில் கறையாக
பெண்கள் சிலரது கண்ணீர் மட்டுமே
மனிதம் இழிந்து ஆண்மையாவதில்
பெருமைப்பட்ட
என் கவிதை சாயம்போன
அந்த நாட்களை வெறுக்கிறேன்.
ஆணை/பெண்ணை தாண்டி
மனிதம் அடைதலே விடுதலை.
கைகொடுக்கிற தோழி/தோழரால்
மீட்கப்படுகிறதே பாக்கியம்.

மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்
ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்
நல்ல கவிதையாய்.
போர்க்களம் என்மீது இறங்கியபோதும்
சிங்களத்து தோழரை தோழியரை
முஸ்லிம் சகோதரரை சகோதரியைக் கேளுங்கள்.
எப்பொழுதும் மனிதனாகவே முயன்றேன்
அதுவே நான் எழுதிய நல்ல கவிதை.

தலை பணியாது
வாழும் ஆசையை இறுகப் பற்றுதலே
எனது கவிதை.

*********************************
இல்லறம்:

ஆற்றங்கரையில்
இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன்.

இன்று தெளிந்து போய்
புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டு தொட்டுச் செல்கிறது அது
நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்
முளைத்தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பது போல.

நேற்றைய துன்பமும் உண்மை.
நாளைய பயமோ அதனினும் உண்மை
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்

நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.

நன்றி: வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் (பெருந்தொகை) - வ.ஐ.ச.ஜெயபாலன் - ஸ்நேகா வெளியீடு, சென்னை - 14 - விலை ரூபாய் 150.

Thanks: http://tamil-lit.blogdrive.com


0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது