கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
*************
ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.
பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.
அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.
இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.
அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.
இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.
இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.
உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!
ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!
வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.
*********
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
http://www.tamilvanan.com/content/2008/11/28/talking-rubbish/
source:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment