வாழ்கிறாள் அம்மா

எங்கேயும் போய்விடவில்லை
அம்மா
வைகைறைப்பனியில் நடக்க
‘ஷூஸ்’ அணியும்போது
கழுத்தில் கம்பளித் துண்டைச்
சுற்றிவிடுகிறாள்

தவளையும் பாம்புமாய்த்
தொண்டையில் கபம்
கட்டுகையில்
மணக்க மணக்கத்
தழை ரசம் வைத்துக் கொடுக்கிறாள்

வழ்க்கம் போலத்
தோப்பும் துரவும் கணக்கும் வழக்கும்
எனக்குத் தொல்லை வராமல்
கண்ணுக்குள் வைத்துக்
காப்பாற்றி வருகிறாள்

பண்டிகை வந்தால்
பளிங்குக் கிண்ணமாய்
வீடு புதுக்கிறாள்

மருமகள் மீது
கொள்ளைப் பிரியம்
மடியில் வைக்காத குறையாய்
கண்களாலேயே ஆசீர்வதிக்கிறாள்

வெளியூர் சென்று
தாமதாய் வந்தால்
கதவாய் மாறிக் காத்திருக்கிறாள்

காலைக் காபி
மேசைமேல் வைக்கும் ஓசை கேட்டு
அம்மா என்று
அழைக்கத் திரும்பினேன்
மனைவி !

பூச்சரம் எடுத்து
அம்மா படத்துக்கு
மாலை இட்டாள் அவள்

எங்கேயும் போய்விவில்லை
அம்மா.
ஆக்கம்; கவிஞர் சிற்பி
( ‘’மூடு பனி’’- கவிதை தொகுப்பு

1 comments:

said...

உங்கள் பதிவுகளை வேர்ட்ப்ரஸ்ஸிலும் காண்கிறேனே?

நீங்கள்தானா அங்கேயும்?

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது