வாழ்க்கைக்கான மந்திரம்..
இன்று ஒரு தகவலில் கேட்டது
ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.
துறவி கிளம்பும்போது... மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.
மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
பல காலங்கள் கழிந்தன. அப்போது,
ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!
இந்த பாடலின் பொருள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டிருந்த வேலையில் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!''
இப்படியான ஒரு வேதனைத் தான் அந்த மன்னனுக்கும் ஏற்பட்டது. அப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.
அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் "இதுவும் கடந்து போகும்" என்று 3 வார்த்தைகள் இருந்தன....
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி... அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை.
ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.
*********
Thanks:http://vanisri.mywebdunia.com/2008/05/19/1211184840000.html
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment