பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பஸான் அவர்களின் 'மன்னிப்பு’
என்கிற சிறுகதையில் மனைவி தவறு செய்த
கணவனை மன்னிக்கிறாள்.
கதையில் ஒரு தம்பதியினர் இடம்
பெறுகின்றனர். மனைவி பெர்த்தி அப்பாவி. அவ்வளவாக
வெளிஉலக வாழ்வு தெரியாதவள். ஆனால் கணவன் ஜார்ஜ்
மீது அளவு கடந்த பிரியமுள்ளவள். திடீரென்று ஒருநாள்
காலை ஒரு மொட்டைக்கடிதம் அவளுக்கு வருகிறது. நகரிலேயே
வசிக்கக் கூடிய இளம்விதவையான ஜூலி என்பவளுடன் ஜார்ஜூக்கு
இருக்கும் கள்ள உறவைப் பிரஸ்தாபிக்கிற கடிதம் அது. படித்ததும்
சுக்குநுாறாகக் கிழித்தெறியும் மனைவி மனக்குமுறலோடு அறைக்குள்
படுத்துக்கிடக்கிறாள். மாலையில் வீடு திரும்பும் கணவனிடம்
செய்தியைச் சொன்னதும் உள்ளூரப் படர்ந்த அதிர்ச்சியைக் காட்டிக்
கொள்ளாமலே அவளுடைய கூச்ச சுபாவத்தின் காரணமாகவே பல
ஆண்டுகளாக தோழியாக உள்ள ஜூலியை அறிமுகப்படுத்தவில்லை
என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அவளிடம் அழைத்துச்
செல்கிறான். கணவனின் கபடற்ற அன்பை நினைத்து மனம்
பூரிக்கிறாள் பெர்த்தி.
எதிர்பாராத விதமாக ஜூலியின் வீட்டு மாடிக்கே வாடகைக்குச்
செல்கின்றனர் தம்பதி. ஜூலியை உயிர்த் தோழியாக நினைத்து
உறவாடுவாடுகிறாள் பெர்த்தி. தோழிகளின் பேச்சு நாள்தோறும்
உல்லாசமானதாக இருக்கும். இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள்
காய்ச்சலில் படுத்த படுக்கையாகிறாள் ஜூலி. மருத்துவம் பார்த்த
டாக்டர் பிழைப்பது அரிதென்று சொல்லி விடுகிறார். தோழியைக்
கட்டித் தழுவி அழுகிறாள் பெர்த்தி. அல்லும் பகலும் உண்ணக் கூடச்
செல்லாமல் நோயாளிக்குத் துணையாக நிற்கின்றனர் இருவரும்.
குறிப்பிட்ட நாள் மாலை தன் உடல்நிலை சற்றே தேவலாம் என்றும்
இருவரையும் சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பி வைக்கிறாள் ஜூலி.
வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்த வேளையில் வேலைக்காரி ஒரு
கடிதத்தைக் கொண்டு வந்து ஜார்ஜிடம் தருகிறாள். கடிதத்தைப் படித்ததும்
அவன் முகம் வெளுக்கிறது. பதற்றத்துடன் ஒருநொடியில் வருவதாகச்
சொல்லி விட்டு வெளியேறுகிறான். அவளை எங்கும் செல்ல வேண்டாம்
என்றும் சொல்லி விட்டுச் செல்கிறான். குறித்த நேரத்தில் அவன்
வராததால் எங்கும் வெகுதுாரம் போயிருக்கிறானோ என்பதைக் கவனிக்க
அவனுடைய அறைக்குச் செல்கிறாள்.
வெளியே எங்கே சென்றாலும்
கையுறைகளை அணிந்து செல்லும் பழக்கமுள்ள ஜார்ஜ் கையுறைகளை
அன்று அணியாமல் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறாள்.
அதே சமயத்தில் கீழே கசக்கி எறியப்பட்டிருந்த கடிதத் துண்டையும்
பார்க்கிறாள். கடிதத்தை அவசரமாக நீவிச் சரியாக்கிப் படித்துப் பார்த்து
அதிர்ச்சியுறுகிறாள். அது ஜூலி எழுதிய கடிதம்.
ஏ அன்பே, நான் சாகப் போகிறேன். ஒரே ஒரு நொடி, நீங்கள் மட்டும்
தனியாக வாருங்கள். உங்கள் மடியில் தலைவைத்து உயிர்விட
வேண்டும் என்று எழுதப் பட்டிருக்கிறது. பெர்த்தியின் நெஞ்சம்
நடுங்குகிறது. இடைக்காலத்தில் இருவரும் திருட்டுத்தனமாகப்
பார்த்துக் கொண்ட பல பழைய விஷயங்கள் ஞாபகத்தில் எழுந்து
குழப்பியடிக்கின்றன.
திரும்பி வந்த கணவனுடன் சகஜமாக அவளால் பேச முடியவில்லை.
ஜூலியும் மரணமுறுகிறாள். பெர்த்தியின் வாய் அதன்பிறகு
ஒரேயடியாக அடைபட்டு விடுகிறது. கண்களால் தன் கணவனை
ஏறிட்டும் பார்ப்பதில்லை. வெறுப்பையும் கோபத்தையும் மறக்க
சதாகாலமும் இறைவனைத் தொழத் தொடங்குகிறாள். ஓராண்டுக்
காலம் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரிடையே எந்தப் பேச்சும்
இல்லை. அவனை மன்னிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல்
அவஸ்தைப் படுகிறாள். கடுமையான மனஉளைச்சலுக்குப் பிறகு,
எந்த ஜூலியால் தன் மனஅமைதி கெட்டதோ அதே ஜூலியின்
கல்லறைக்குக் கணவனுடன் சென்று மலர்மாலை வைத்துப் பிரார்த்தனை
செய்த பிறகு இருவரையும் மன்னிப்பதாகச் சொல்கிறாள்.
புது வாழ்க்கையைத் தொடரக் கணவனை அழைக்கிறாள்.
பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பும் கணவன்மார்களைச்
சலித்துக் கொண்டும் வசைபாடியும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும்
மனைவிமார்களின் மனக்குமுறல்களைச் சங்கப் பாடல்களில்
ஏராளமாகப் பார்க்கலாம்.
பெர்த்தியின் மனக்குமுறலைப் படிக்கும்
போது உலகெங்கும் வாழும் பெண்களின் பெ முச்சே இலக்கியமாக
மாறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒருபுறம் துடிப்பும் கோபமும்
மிகுந்த குமுறல். மறுபுறம் அனைத்தும் தணிந்த மன்னிப்பு.
பெண்கள் மட்டுமல்ல, ஒருவிதத்தில் ஆண்களும் இந்த இரண்டு
புள்ளிகளுக்கிடையே மாறிமாறித் தாவிப் பறக்கும் பறவைகளாக
இருக்கிறார்கள்.
___________________________________________________
நன்றி;
பாவண்ணன் Thainnai.com-ல் 21.-12-2002 ல் பதிவிட்ட கட்டுரையின் பகுதி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment