>‘’வீட்டிலே கடுமையான இட நெருக்கடி ஆயிடுச்சுப்பா’’ என்றான் தீபக்.
>‘’என் குடும்பமும் தம்பி குடும்பமும்,ரெண்டு பேரோட குழந்தைகளும்……. பெரிய வீடாப் பார்த்து மாறிடணும்பா ‘
>‘’பார்க்கலாம் ‘’ என்றார் அப்பா, அசிரத்தையாக.
>மறுநாள் சித்தப்பா குடும்பத்துடன் வந்து இறங்கியதும் ஆடிப்போனான்,தீபக். பள்ளி விடுமுறையாதலால் ஒருவாரம் தங்கப் போகிறாராம். ஏறகனவே
வீட்டில் நெருக்கடி….
>மூன்றே நாட்களில் அவன் மாமாவுரம் திருச்சியிலிருந்து குடும்பத்துடன்
வந்து நின்றார். ‘’திருப்பதி புறப்பட்டோம், வழியிலே இங்கே நாலைஞ்சு நாள்
தங்கிட்டு….’’ என்றதும் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது தீபக்குக்கு. வீட்டில் கால் வைக்க இடமில்லை. சந்தைக்கடை மாதிரி நாள் முழுக்க இரைச்சல். விழி பிதுங்கியது.
>ஒரு வழியாக சித்தப்பாவும் மாமாவும் வெளியேறியதும் பெருமூச்சு விட்டான்.
>‘’எப்படி இருக்கு இப்போ வீடு ?’’ என்றார்,அப்பா.
>‘’அப்பாடா, நிம்மதியா இருக்கப்பா. வீடும் விசாலமாயிடுச்சு’’ என்றான்.
சித்தப்பாவும் மாமாவும் வந்துபோனதே அப்பாவின் ஏற்பாடுதான் என்பது தெரியாமல்.
***********************************************
ஆக்கம்; ஷேக் சிந்தா மதார்
குமுதம் 30-07-08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment