திருமதி.துபாய் !



பட்டும், நகையும்...
பகட்டும், பணமும்
``என் வீட்டுக்காரர் ஃபாரின்ல இருக்கார்!''
என்ற வீண் பிதற்றலும், விளம்பரமுமாய்
பகல் பொழுது போதாது
பெருமைப் பட்டுக் கொள்ள...

அந்தி வந்ததும்
உள்ளிருக்கும் பெண்மை
விழித்து முகிழ்க்கும்;
ஜோடியாய்ப் போவோரை
பார்வை தீய்த்துப் பொசுக்கும்;

வளையல் ஓசையும், சிரிப்பும்
நாராசமாய் ஒலிக்கும்;
கண்ணாடி முன் நின்றால்
கடைசல் குழைவும்,
சிற்பத் துல்லியமாய்
சிறுத்த இடையும்
நீண்ட கால்களுமாய்
பிரதி பிம்பம் கேலியாய் சிரிக்கும்;

ஆளப்படாத அழகும்
பயன்படுத்தாத பேரெழிலும்
பழுத்த வேர்ப்பலாவையும்
மாலை நிலாவையும்
ஞாபகப்படுத்தி சோகம் கூட்டும்;

ஆல்பம் திறப்பாள்;
சேனல் மாற்றுவாள்;
புத்தகம் புரட்டுவாள்;
புத்தி எதிலும் நிலைக்காது.
தேகம் பற்றி எரிய ஜன்னலோரம் நிற்கும் நேரம்
தொலைபேசி சிணுங்கும்;

கணவன் தான்...
காதல் பேசும் அவனின் பேச்சு
எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றும்;
எப்பொழுதோ கிடைத்த
முயக்கின் ருசி
நுனி நாக்கில் தித்திக்கும்.

உதட்டுக்கு எட்டியது
உள்ளுக்குக் கிடைக்கா
வெறியில்
உடல் கிடுகிடுக்கும்....
உலகமே எதிரியாகும்.

இரக்கம் காட்டா
காதல் நெருப்பால்
இளந்தேகம்
மெழுகாய் உருகும்;
பேதை பெதும்பையாகி
வெம்பி வெதும்புவாள்;

இவள் இப்பொழுது
கன்னியுமில்லை
கைம் பெண்ணுமில்லை;
கணவன் இருந்தும்
புண்ணியம் இல்லை;
தலைவனை நினைத்து
தலையணை அணைப்பாள்;
கறிக்கு உதவுமா ஏட்டுச் சுரைக்காய்?
காமத் தீ மேலும் தகிக்க
எழுவாள்;
அழுவாள்;
ஷவரைத் திறக்க
உச்சந்தலையில் கொட்டும் நீர்
உப்பு நீராய் உடலில் வழியும்
கண்ணீர் கலந்து...

லதா வில்சன்
Thanks
http://www.kumudam.com/magazine/Snegiti/2008-08-01/pg20.php

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது