சாட்டைகளின் சாத்திரம்

கோசின்ரா கவிதைகள்

சாட்டைகளின் சாத்திரம்
************************
எல்லோரும் பார்க்கும் படியாயிருந்த
சாட்டை தொலைந்து விட்டது.
அரண்மனையின்
பலிபீடத்திலிருந்தது ஒரு காலத்தில்
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு
ஜமீன்தார்களின் காலம் முடிந்தபிறகு
சாட்டையும் வெளியேறிவிட்டது.

அந்தச் சாட்டையின் நகல்
வீடுகளில்தொங்கிக் கொண்டிருக்கிறது.
விருந்தினர்களை பயமுறுத்திக் கொண்டு
ஜனநாயக நாட்டில்
சாட்டைகளில்லாமல்
நடமாடிக் கொண்டிருந்தார்கள் மக்கள்.
சாட்டைகள் மனிதனின்
மாமிசத்தைத் தின்ற தெல்லாம்
பழைய காலம்.

இப்போது சாட்டைகள்
அலங்காரப் பொருளாகிவிட்டது
அரசியல்வாதிகள்
நடிகர்கள்
அவ்வப்போது
சொடுக்குவார்கள் சாட்டையை
எல்லாம் நடிப்புத்தான்.
அப்புறம் சாட்டைகள் யார்
கண்ணிலும் படவில்லை.
இனி வரலாற்றாசிரியர்கள் எழுதுவார்கள்
சாட்டைகளின் காலம் முடிந்து
பதவிகளின் காலம் தொடங்கிவிட்டதென்று.
**************************************
நன்றி;
http://www.keetru.com/kanavu/aug08/kosinra.php

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது